இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகள் ஏறுவதை தவிர்க்க, பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தாமல் செல்லும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஞானகுருநாதன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஜூன் 20ம் தேதி புதுக்கோட்டை கைகுறிச்சியில் அரசு பஸ், நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், மாணவர்களால் பஸ்சில் ஏற முடியவில்லை. இதனால் ஏழு மாணவர்கள் வேனில் ஏறிச்சென்றனர். அந்த வேன் விபத்தில் சிக்கியதில் 7 மாணவர்களும் உயிரிழந்தனர். அரசு பஸ்களை அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல உத்தரவிட வேண்டும். மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல மறுக்கும் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: கைகுறிச்சி சம்பவம் போல் ஏற்கனவே ஒரு சம்பவம் நடந்தபோது, ஐகோர்ட் தாமாக முன்வந்து இப்பிரச்னையை வழக்காக எடுத்து விசாரித்தது. அப்போது, பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை கண்டிப்பாக பஸ்சில் ஏற்றி செல்ல உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பிறகு, அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சை நிறுத்தி இலவச பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டும். தவறும் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் பஸ் தொடர்பாக பஸ் எண், வழித்தட எண், நிற்காமல் சென்ற நேரம் உள்ளிட்ட விபரங்களுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாகிகள், பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவியின் பெற்றோர் போக்குவரத்து கழகங்களில் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் வந்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர்கள் மீது 2010 ஏப்ரல் 1ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை விபரத்தை ஆகஸ்ட் 19ம் தேதி கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment