இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில்வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதைத் தவிர 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களும், 782 சிறப்பாசிரியர்களும், 232 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் 32 பேரும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 30 பேரும், விவசாயத்துறை பயிற்றுநர்கள் 25 பேரும், அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு முதல் நியமனமாக இசை, ஓவியம், தையற்கலை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்துள்ளது.
முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்குரிய பட்டியல் கிடைத்ததும் இந்த நியமனப் பணிகள் தொடங்கிவிடும். அடுத்த 45 நாள்களுக்குள் இந்த பணி நியமனத்தை முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
அடுத்ததாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் பேருக்கும் ஹால் டிக்கெட் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 422 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்குப் பிறகு ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடவும், அதற்கடுத்த 2 மாதங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் தாள் தேர்வு எழுத 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 466 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
செப்டம்பரில் தேர்வு முடிவு: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். அதன்பிறகு, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் பட்டதாரி ஆசிரியர்களும், மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 12,295 பட்டதாரி ஆசிரியர்கள், 817 இடைநிலை ஆசிரியர்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் அறிவிப்பு: விவசாயப் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள், அரசுச் சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் நியமனத்துக்கான விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு இந்த நியமனத்துக்கான பணிகள் தொடங்கும். பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்
விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன
ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹால் டிக்கெட்
ஆகஸ்ட் 17,18-ல் தேர்வு
செப்டம்பரில் தேர்வு முடிவு
817 இடைநிலை ஆசிரியர் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்
2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் ஹால் டிக்கெட் பதிவேற்றம்
ஜூலை 21-ல் தேர்வு
ஆகஸ்ட்டில் தேர்வு முடிவு
செப்டம்பர் அல்லது அக்டோபரில் பணி நியமனம்
12,295 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்
782 சிறப்பாசிரியர்கள் நியமனம்
பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டுள்ளது
ஆகஸ்ட்டில் பணி நியமனம்
1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன
நேர்முகத் தேர்வு செப்டம்பரில் பணி நியமனம்
No comments:
Post a Comment