அரியலூர் தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பு கலந்தாய்வு முதல் நாளில் 2 பேருக்கு சேர்க்கை ஆணைவழங்கப் பட்டது. தொழிற்பிரிவினர் இன்று பங்கேற்பு.
தொழிற்பிரிவினர் இன்று பங்கேற்கின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள 50 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அரியலூர் மாவட்டத்திற்கான கலந்தாய்வு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆர்எம்எஸ்ஏ அலுவலகத்திலும், பெரம்பலூர் மாவட்டத்திற்கான கலந்தாய்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆர்எம்எஸ்ஏ அலுவலகத்திலும் நடைபெற்றன. அரியலூர் மாவட்டத்தில் இருந்து 106 விண்ணப்பங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 14 விண்ணப்பங்கள் என மொத்தம் 120 பேர் விண்ணப்பித்திருந்தனர்.கலந்தாய்வின் முதல் நாளான நேற்று மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு மாணவியும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மாணவியும் கலந்து கொண்டனர். இருவரும் அரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்தனர். அரியலூர் ஆர்எம்எஸ்ஏ அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற ஜெயந்தி என்ற மாணவிக்கு அரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராதாகிருஷ்ணன் ஆணை வழங்கினார். கலந்தாய்வில் முதுநிலை விரிவுரையாளர் ராஜா, விரிவுரையாளர்கள் ராஜேந்திரன், மணமலர்செல்வி, அமீர்ஜான், ஆர்எம்எஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.இன்று (9ம் தேதி) தொழிற்பிரிவு, நாளை (10ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11ம் தேதி) கலைப்பிரிவு, வரும் 12,13 மற்றும் 15ம் தேதிகளில அறிவியல் பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு விண்ணப்பித்து உரிய காலத்தில் அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்கள் கீழப்பழூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலந்தாய்விற்கு வரும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ் (டிசி), நிரந்தர ஜாதி சான்றிதழ், இருப்பிட அல்லது வாழ்விட சான்று, வருமான சான்று, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், சுதந்திர தின போராட்ட தியாகிள் வாரிசு ஆகியோர் சிறப்பு ஒதுக்கீட்டிற்கு தேவையான சான்றுகள், வயது வரம்பில் சலுகை பெறுவோர், ஆதரவற்றோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், கலப்பு திருமண தம்பதியர் ஆகியோர் மேற்கண்ட அசல் சான்றிதழ்களை கொண்டு வருதல் வேண்டும். இல்லையெனில் விண்ணப்பதாரர் சேர்க்கை கோர இயலாது. விண்ணப்பித்த அனைவருக்கும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனம் ஆகியவற்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர், டைரக்டர், எஸ்சிஇஆர்டீ, சென்னை-6.பேயபிள் அட் சென்னை என்ற முகவரிக்கு ரூ.3,500க்கான வரைவோலை (டிடி) எடுத்து வருதல் வேண்டும். மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரும் நாளன்று காலியாக உள்ள இடங்களில் மட்டுமே சேர்க்கை கோர இயலும்.இந்த தகவலை அரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment