அடையாள அட்டை அளிக்கப்பட்ட பெரும்பாலானோர், பெயர்,காப்பீடுக்கு உரிய நபர்களின் விவரம் ஆகியவை தவறாக இருப்பதால், அடையாள அட்டை கிடைத்தும் பலனில்லை என,புலம்புகின்றனர்.தமிழக அரசு ஊழியர்கள், 18 லட்சம் பேருக்கும்,அவர்களது குடும்பத்தாருக்கும், காப்பீடு அளிக்கும் திட்டம் தி.மு.க.,ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.இதற்காக, அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் தொகை பிடித்தம் செய்யப்பட்டது. "ஸ்டார்' என்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்து, தி.மு.க., அரசு, இத்திட்டத்தை செயல்படுத்தியது.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தனியாருடன் செய்த ஒப்பந்தத்தை நீட்டிக்காமல், பொதுக் காப்பீட்டு நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம், தமிழக அரசு செய்து கொண்ட இந்த ஒப்பந்தம், 2012, ஜூலை, 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதை தொடர்ந்து, காப்பீடு பெற தகுதியுள்ளவர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அடையாள அட்டையை காட்டினால் தான்,அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற முடியும்.ஆனால், புதிய காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்து, 13 மாதங்கள் முடிந்த நிலையிலும், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு அடையாள அட்டை முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால், இத்திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, நீதித்துறையில் உதவியாளராக பணிபுரியும் பொன்ராஜ் கூறியதாவது:புதிய காப்பீட்டு திட்டத்தில், எனக்கும், என் மனைவி, என் இரு மகன்களுக்கு, சிகிச்சை பெற தகுதியுள்ளது. இதற்காக, மாதம், 70 ரூபாய், என் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், இதுவரை, எனக்கு காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.சர்க்கரை நோயால் அவதிப்படும் என் மனைவிக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என,மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு, ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கான தொகை என்னிடம் இல்லை. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில்,மனைவிக்கு சிகிச்சை பெறலாம் என்றால், காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்கின்றனர். இதுவரை, எனக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை. இதனால், என் மனைவிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளேன். மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன்.இவ்வாறு, பொன்ராஜ் கூறினார்.
காப்பீட்டு அடையாள அட்டை பெறுவது குறித்து, அரசு ஊழியர் சங்கத்தினர் கூறியதாவது: அலுவலக பொறுப்பாளர் மூலம்,காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதற்கான விவரங்களை,புகைப்படத்துடன் கொடுத்தோம். பலருக்கு அட்டை வந்துள்ளது.பெரும்பாலான ஊழியர்களுக்கு, அடையாள அட்டை இன்னும் கிடைக்கவில்லை. அடையாள அட்டை பெற்ற பலர்,அதில் தவறுகள் இருப்பதாகக் கூறியதால், அடையாள அட்டையைத் திருத்தித் தருவதாகக் கூறி, திரும்பப் பெற்றுக் கொண்டனர்.அடையாள அட்டை அளிக்கும் வரையில், மாற்று அடையாளங்களைப் பெற்றுக் கொண்டு, சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இப்பிரச்னை குறித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், "தமிழக அரசு ஊழியர்களுக்கு,காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது'என்றனர்.
No comments:
Post a Comment