திருக்குறள்

29/05/2013

பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கை; விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

தனியார் சுயநிதி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான இறுதி தேதியை 2 வாரங்களுக்கு நீட்டித்து மெட்ரிக்குலேஷன் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புக்களில் 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

                          

இதையடுத்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குனரகம் அறிவித்தது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள், 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை சேர்த்தால் நன்கொடை கிடைக்காது, மேலும் அரசு நிர்ணயித்த குறைந்த கல்வி கட்டணமே கிடைக்கும் என்று ஏழை மாணவர்களுக்கு விண்ணப்பங்களை தராமல் இழுத்தடித்தன.

மே மாதம் 9ஆம் தேதிக்கு பிறகு பள்ளிக்கு சென்ற பெற்றோர்களிடம் இறுதி தேதி முடிந்து விட்டது என்று காரணம் சொல்லி தனியார் பள்ளிகள் திருப்பி அனுப்பின. இதனால் பல தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படாமலே இருந்தன. தனியார் பள்ளிகளின் இந்த மோசடி நாடகத்தை எதிர்த்து கல்வியாளர்கள் குரல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து மெட்ரிக்குலேசன் கல்வி இயக்குனரகம் இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் 25 சதவீதம் இடங்களை ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகளை பள்ளிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான இடங்களில் பெற்றோர்களுக்கு விண்ணப்பங்கள் சரிவர கிடைக்கவில்லை. எனவே தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுடைய பெற்றோர்கள் அங்கேயே விண்ணப்பிக்கலாம்.

முதன்மை கல்வி அலுவலர் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுடைய குழந்தைகளை தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment