திருக்குறள்

31/05/2013

500-க்கு 499 மதிப்பெண் பெற்றும் தமிழ் படிக்காததால் முதலிடத்தை இழந்த ரச்சனா !! தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே அதிக தேர்ச்சி, அதிக மதிப்பெண் !


500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றாலும், தமிழை பாடமாகப் படிக்காததால் ரச்சனா என்ற மாணவி முதலிடத்தை இழந்தார். எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 498 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அனுஷா, தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரைப் போன்றே தமிழ், ஆங்கிலத்தில் 99-ம், மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறும் எடுத்த எட்டு மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தவிர்த்துவிட்டு, வேறு மொழிகளை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட 9 பேரை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றவர்கள். புதுவையைச் சேர்ந்த ஹம்சிகா, பொன்னேரி வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ரச்சனா ஆகிய மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ரச்சனா சமஸ்கிருத்தை பாடமாக எடுத்துப் படித்தவர். அதில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஹம்சிகா ப்ரெஞ்சை மொழிப்பாடமாகப் படித்து 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் தமிழை எடுத்துப் படிக்காததால் அவர்களால் முதலிட அந்தஸ்தைப் பெற முடியவில்லை. எஸ்எஸ்எல்சியில் தமிழைப் பாடமாகப் படித்தால் மட்டுமே மாநில அளவில் முதலிட அந்தஸ்தைப் பெறும் போட்டியில் இடம்பெற முடியும். மாநில அரசின் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய குற்றாலம் மாணவி மாநிலத்தில் 2வது இடம் நெல்லை மாவட்டம் பழைய குற்றாலாம் ஹில்டன் பள்ளியில் படித்த மாணவி ஸ்டெர்லின் பொன் ஜெபா மாநில அளவில் 2வது இடத்தையும், நெல்லை மாவட்ட அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் விவரம்- தமிழ் -98, ஆங்கிலம் -99, கணிதம்-100, சமுக அறிவியல்-100, அறிவியல் -100, மொத்த மதிப்பெண் : 497


தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே அதிக தேர்ச்சி, அதிக மதிப்பெண்!


எஸ்எஸ்எல்சியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களே அதிக தேர்ச்சியை அடைந்துள்ளனர், அதிக மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகப்படுத்தி வரும் இந்த சூழலில் இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் தமிழை ஒரு பாடமாகவும், ஆங்கிலம் தவிர பிற பாடங்களை தமிழ் வழியிலும் படித்தவர்கள். மற்ற மூன்று லட்சம் மாணவ மாணவிகளில் 90 சதவீதம் பேர் தமிழை ஒரு மொழியாக எடுத்துப் படித்தவர்கள். இவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிகள், இரண்டாம், மூன்றாமிடம் பெற்ற மாணவ மாணவிகளில் பெரும்பாலானோர் தமிழ் வழியில் படித்தவர்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகள் 490க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் படிப்பை தாய்மொழியில் படிக்கும்போது, மனப்பாட முறையைத் தாண்டி, சிந்திக்கும் திறன் மாணவ மாணவிகளுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. சொந்த மொழி நடையில் எழுதும் பாங்கும் அமைகிறது என்பதையே இது காட்டுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment