திருக்குறள்

30/05/2013

சத்துணவு மானிய உயர்வில் அதிருப்தி பள்ளிகளில் கலவை சாதம் திட்டம் செயல்படுத்துவதில் திடீர் சிக்கல்



சத்துணவில் உணவு மானியத் தொகையை உயர்த்தியதில் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், 13 வகையான கலவை சாதம் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் 2013-14 கல்வியாண்டு முதல் 13 வகையான கலவை சாதம், முட்டை மசாலா வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. முன்னோட்டமாக மாவட்டத்துக்கு ஒரு ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டது. அப்போது ஒரு மாணவருக்கு கூடுதலாக ரூ.7 வரை செலவானது. இதையடுத்து சத்துணவுக்கு ஒதுக்கப்படும் உணவு மானியத்தை உயர்த்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், உணவு மானியத்தை தமிழக அரசு இரண்டு விதமாக உயர்த்தியுள்ளது.

பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 70 பைசா, மளிகைக்கு 20 பைசா, எரிபொருளுக்கு 40 பைசா என மொத்தம் ரூ.1.30 ஒதுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு காய்கறிக்கு 80 பைசா, மளிகைக்கு 20 பைசா, எரிபொருளுக்கு 40 பைசா என மொத்தம் ரூ.1.40 ஒதுக்கப்பட்டுள்ளது.

 பருப்பு பயன்படுத்தப்படாத நாட்களில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 82 பைசா, மளிகைக்கு 40 பைசா, எரிபொருளுக்கு 48 பைசா என மொத்தம் ரூ.1.70 ஒதுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு காய்கறிக்கு 92 பைசா, மளிகைக்கு 40 பைசா, எரிபொருளுக்கு 48 பைசா என மொத்தம் ரூ.1.80 ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் அங்கன்வாடி மையங்களில் பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் 2 முதல் 5வயது வரையுள்ள ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 70 பைசா, மளிகைக்கு 24 பைசா, எரிபொருளுக்கு 19 பைசா என மொத்தம் ரூ.1.13, பருப்பு பயன்படுத்தாத நாட்களில் காய்கறிக்கு 80 பைசா, மளிகைக்கு 36 பைசா, எரிபொருளுக்கு 19 பைசா என மொத்தம் ரூ.1.35 ஒதுக்கப்பட்டுள்ளது.

 உயர்த்தப்பட்ட உணவு மானியம் குறைவாக உள்ளதால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், 'விலைவாசி உயர்வால் 13 வகை கலவை சாதம், முட்டை மசாலா திட்டத்தில் பீன்ஸ், காரட், தக்காளி, வெங்காயம், மிளகு போன்ற பொருட்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால் ஒரு மாணவருக்கு குறைந்தது ரூ.7வரை செலவாகும். ஆனால் மிக குறைவான தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 100 மாணவருக்கு தினந்தோறும் ரூ.500 வரை ஊழியர்களுக்கு கூடுதல் செலவாகும். இதனால் இத்திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே உணவு மானியத்தை குறைந்தது ரூ.5 ஆக உயர்த்த வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment