2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.
2,881 காலி இடங்கள்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.
அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.
நாளை முதல் விண்ணப்பம்
இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். உரிய தேர்வு கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் செலான் படிவத்தை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ செலுத்தலாம்.
கடைசி நாள்
விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 14–ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எழுத்து தேர்வில் ‘ஆப்ஜெக்டிவ்’ (கொள்குறி வகை) முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 வினாக்களும், கல்வியியல் முறை பகுதியில் இருந்து 30 வினாக்களும், பொது அறிவில் இருந்து 10 வினாக்களும் இடம்பெற்று இருக்கும். எழுத்து தேர்வு நீங்கலாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) அதிகபட்சம் 4 மதிப்பெண்களும், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு (பிளஸ்–1, பிளஸ்–2–வில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு வகுப்பு எடுத்த அனுபவம்) அதிகபட்சம் 3 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
எங்கு கிடைக்கும்?
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14–ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இதே பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment