மாநிலம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே, 15ம் தேதி, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, கல்வித்துறை சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார். "50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்படும்" என முதல்வர் அறிவித்தார்.
ஆனால், பள்ளிகள் திறந்து, ஒரு மாதம் கடந்த நிலையிலும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல், வெளியாகாத நிலை இருந்தது. இதனால், மேல்நிலை வகுப்புகளில், மாணவர் சேர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டது.
தற்போது, மாணவர் சேர்க்கைக்கு வசதியாக, 100 உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு முதல் நான்கு வரை... சென்னை மாவட்டம் தவிர்த்து, இதர மாவட்டங்களில், 100 பள்ளிகளும், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
மாவட்டத்திற்கு, இரண்டு முதல், நான்கு பள்ளிகள் வரை, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில், கொடும்பாலூர், தூரியூர், மலக்குடிபட்டி, கல்லாகுட்டை என, நான்கு இடங்களில் உள்ள பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில், ஐந்து பள்ளிகள், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில், தலா, நான்கு பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை, கல்வித்துறை வெளியிடவில்லை.
அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் என, பலரும், தங்களது தொகுதியில் உள்ள பள்ளியை, தரம் உயர்த்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அனைவரது கோரிக்கையையும், கல்வித் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், பட்டியலை வெளியிட்டால், பிரச்னை வரும் என, நினைத்து, துறை, அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அனைவரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை நச்சரித்து, பட்டியலை கேட்டு வருகின்றனர்.
"ஐம்பது நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்"
என்றும், முதல்வர் அறிவித்திருந்தார். இந்த பட்டியலும், இன்னும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment