இப்போதெல்லாம் கல்வி என்பது சர்வதேச முறையிலான வெளிப்பாடு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. வெறும் புத்தகங்களில் இருப்பதை மட்டும் படிப்பது என்ற நிலை மாறி, செயல்முறை வகுப்புகளுக்காக அயல்நாடுகளுக்கே செல்வது என்பது தற்போதைய கல்வி முறையில் ஒரு அங்கமாகி விட்டது.
இத்தகைய சுற்றுலாக்கள் ஊரை மட்டும் சுற்றிப்பார்ப்பதுடன் முடிவதில்லை. அங்குள்ள பள்ளிகளுள் ஏதாவது ஒன்றுடன் இணைந்து செல்லும் இந்த மாணவர்கள் அங்குள்ள வகுப்பறைகளில் கல்வி கற்பிக்கப்படும் விதத்தை அறிந்து கொள்கின்றனர். இதுபோன்ற வகுப்புகளுடன் இணைந்த கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்துதரும் பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம், சென்ற வருடத்திற்கு இந்த வருடம் இத்தகைய சுற்றுலாவிற்கு விண்ணப்பித்துள்ள பள்ளிகளின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகியுள்ளது என்று தெரிவிக்கின்றது.
சென்ற வருடம் 95 பள்ளிகள் இத்தகைய சுற்றுலாவிற்கு விண்ணப்பித்திருந்ததாகவும், இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களுக்குள்ளாகவே 100 பள்ளிகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பிரிட்டிஷ் கவுன்சிலின் மூத்த திட்ட அதிகாரியான ரமேஷ் வேலுச்சாமி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இப்போது 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்தத் திட்டத்தில் உள்ளன. பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுமுறை உலகக் கல்வி என்ற திட்டத்தின் கீழ் 1,500 பவுண்டுகள் மானியம் அளிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்ற நாடுகளுக்கு சென்றுவந்தனர். தற்போது, மாணவர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். புதிய கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் உடைய மாணவர்கள் கட்டண விகிதங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுடைய கூட்டாளியாகத் தேர்வு செய்யப்படும் மாணவனை அவனுடைய இடத்தில் தங்க அனுமதித்தல் வேண்டும் போன்ற விதிமுறைகளின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
கல்வியாளர்களும் இதனை வரவேற்கின்றனர்.
இவ்வாறு மாணவர்களை அனுப்ப இயலாத பள்ளிகளில், வீடியோ மூலம் அயல்நாட்டுப் பள்ளிகளுடன் தொடர்பு கொண்டு உரையாடும் வாய்ப்பினை மாணவர்கள் பெறுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று வருடங்களாக இரண்டு ஆசிரியர்களை மட்டுமே அனுப்புவதாக சேவாலயாவின் மகாகவி பாரதியார் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அன்னபூர்ணா நாராயணசாமி கூறுகின்றார்.
No comments:
Post a Comment