மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET)தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
கடந்த ஆண்டு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது வரும் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் மீண்டும் TETதேர்வு நடைபெறும் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள கடந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் TET தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆண்டு முதல், பணி நியமன முறையில் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. முதலில் TET தேர்வு நடத்தப்பட்டு அதில் 60 சதவீதமும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்போது, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது தகுதித் தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணியைப் பொருத்தவரை (ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு), பிளஸ் டூ மதிப்பெண்கள், ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ பட்டம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை, பிளஸ் டூ மதிப்பெண், பட்டப் படிப்பு மதிப்பெண், பிஎட் மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி), பழங்குடியின வகுப்பினர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பணி நியமனம் வழங்கலாம் என்று ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் (NCTE) கூறியிருக்கிறது. ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழக அரசு மதிப்பெண் தளர்வு வழங்காதது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் காலிப் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதியை நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆண்டு (2012) அக்டோபர் 5-ஆம் தேதி அரசாணை எண்.252-ஐ வெளியிட்டது. இந்த அரசாணையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. அதனால், இந்த அரசாணை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் சமீபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
“மத்திய அரசு தனது அலுவலகக் குறிப்புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வழிகாட்டுதலைக் கொடுத்திருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களின் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்பதே அது. அவற்றிலிருந்து மாநில அரசுகள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதாவது, அவற்றைவிட அதிகமான சலுகைகளை வழங்கலாமே தவிர, சலுகைகளை மறுப்பதற்கு மாநிலங்களுக்கு உரிமையில்லை. அரசாணை எண்.252 இடஒதுக்கீட்டை மறுத்து, ‘தரத்தை’ப் பற்றி மட்டுமே பேசுகிறது. இது சரியல்ல” என்கிறார், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திருத்தி அமைக்கவேண்டும். எஸ்.டி., எஸ்.சி. பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் மதிப்பெண்களிலும் அவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும். மிகவும் பிற்பட்ட பகுதிகளிலும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனம் அளிக்க வேண்டும்” என்கிறார், இந்திய அரசின் முன்னாள் செயலர் பி.எஸ்.கிருஷ்ணன்.
தகுதியும், இடஒதுக்கீடும் என்றுமே முரணாக இருந்ததில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவமே இடஒதுக்கீடு ஆகும். உரிய சூழலும், தகுந்த பயிற்சியும் வழங்கப்பட்டால் யார் வேண்டுமானாலும் தகுதி உடையவர் ஆகலாம். ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதன் அடிப்படையிலான பணி நியமனத்திலும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மதிப்பெண் தளர்வு வழங்கவேண்டும். சமூக நீதியைக் காக்கும் பொருட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையும், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
“அரசாணை எண்.252 திரும்பப் பெறப்பட்டு, உரிய திருத்தங்களுடன் புதிய அரசாணை வழங்கப்படவேண்டும். ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைப்பிடிக்கவேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிப்பது என்பது தரத்தில் பின்தங்கியது ஆகாது” என்கிறார், கல்வியாளர் வி.வசந்திதேவி.
அரசாணை எண்.252 தீர்மானித்துள்ள தகுதியின் அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் பின்பற்றப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு வழிமுறை தன்னிச்சையானது என்பதே ஒட்டுமொத்தக் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பின்பற்றுவது போல இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தங்களது கோரிக்கைகளையும், தீர்மானத்தையும் வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனுவும் அளித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment