திருக்குறள்

30/06/2013

பட்டியல் அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எவை?

தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த அறிவிப்பு பள்ளிகள் திறக்கும் முன் செய்யப்பட்டு தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் விவரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தகுதி உள்ள ஆசிரியர்கள் உரிய பள்ளிகளுக்கு மாறுதலாகி செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதுபோல் கிராமப்புற மாணவர்கள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் அங்கேயே உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த கல்வி ஆண்டில் வழக்கம் போல் 100 மற்றும் 50 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன பிறகும் தரம் உயரும் 150 பள்ளிகள் எவை எவை என்ற பட்டியல் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. பள்ளிகள் கடந்த 10ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்டது. 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 3 வாரபடிப்பு முடிந்துவிட்டது. இதுபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கை முடிந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 3 முதல் 4 பள்ளிகளின் பட்டியல் தரம் உயர்த்தப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள்ஆகி விட்டன. இந்தப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்படும் என இனி அறிவிக்கப்படும் போது வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் இப்பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்ப்பது மிகுந்த சிரமமான செயலாக இருக்கும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் 10 சதவீதம் மாணவர்களையாவது உயர்த்த வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வகுப்புகள் தொடங்கப்பட்ட பின் புதிதாக தரம் உயர்த்தப்படும் 50 மேல்நிலை மற்றும் 100 உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எப்படி சேர்வார்கள் என்ற கவலை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பிற்கு இடம் கிடைக்காமல் பல மாணவர்கள் பாலிடெக்னிக், ஐடிஐ என வேறு தொழிற்கல்வியை தேர்வு செய்துள்ளனர். இவர்களும் புதிதாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு இனி திரும்புவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 'காலத்தே பயிர் செய்' என்பது தான் கல்வி கற்பிப்பதின் தாரகமந்திரம். எனவே தேவையான நேரத்திற்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளை அடை யாளம் காண தவறி வரும் கல்வித்துறை இனியாவது காலம் தாழ்த்தாமல் பட்டியலை வெளியிட வேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment