தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களிடையே தன்னம்பிக்கையை வளரச் செய்யும் வகையிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மட்டுமல்லாமல் அக்குழந்தைகளின் பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ் நாட்டில் உள்ளடக்கிய கல்விக் கான மாநில ஆதார வள மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் சென்னை, சாந்தோமில் 46 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கான உள்ள டக்கிய கல்விக்கான மாநில ஆதார வள மையம் நிறுவப்பட்டுள்ளது.
மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை, போன்றவற்றை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள தக்க ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அகில இந்திய அளவில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளடக்கிய கல்விக்கான மாநில ஆதாரவள மையத்தில், இயன்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பார்வை தூண்டல், மாற்றுத் திறனாளி குழந்தைகள் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள், குழந்தைகளின் குறைபாடுகளின் தன்மையை அளவிடும் மையம், பெற்றோர்களுக்கான ஆலோசனை மையம், அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பயிற்சி மையம், சிறப்பு புத்தகங்கள் கொண்ட நூலகம், தேசிய நிறுவனங்களின் தகவல் மையம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவச் சமுதாயத்திற்குத் தேவையான வாய்ப்பும் வசதியும் வழங்கி, அவர்களின் கல்வி கற்றலை ஊக்குவித்திடவும், தரமான கல்வியினை வழங்கிடவும், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதவை என்பதைக் கருத்தில் கொண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுத்தி வருகிறது.
அதன்படி, 91 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுற்றுச் சுவர் என 87 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உட்கட்டமைப்பு வசதிகள்;
நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பொம்ம ஹள்ளி, ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் மற்றும் காசிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் மற்றும் செவ்வூர், திருப்பூர் மாவட்டம் அருள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் மற்றும் வள்ளுவப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மற்றும் தேவரப்பன்பட்டி ஆகிய 11 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்;
நாகப்பட்டினத்தில் 17 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரியில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம்;
ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்; பொது மக்களிடம் புத்தகம் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு மாநகரங்களில் 5 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டடங்கள்;
கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனத்துடன் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் ஜி. அரியூர், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் நல்லூர், சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஆகிய 6 இடங்களில் 17 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள்;
என மொத்தம், 117 கோடியே 77 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 91 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் 11 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 6 மாதிரிப் பள்ளிகள், 2 தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 2 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 2 மாவட்ட நூலகங்கள் ஆகிய வற்றிற்கான புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment