திருக்குறள்

06/07/2013

எச்சரிக்கை! அபாய மணி அடித்துவிட்டது! ஆசிரியர்களே எச்சரிக்கை! இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே தொடக்கக் கல்வித் துறை மிஞ்சியிருக்கம்.

ஆசிரியர்கள் நாம் இன்னும் அடித்துக் கொண்டிருந்தால் விரைவில் நமக்கும் முடிவு நெருங்கி விடும்.
அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் 10 க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் (சுமார் அல்லது ஏறத்தாழ எல்லாம் இல்லை) துல்லியமாக 1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதால் அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அடுத்த கட்டமாக20 க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப்பள்ளிகள் துல்லியமாக5679 பள்ளிகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இறுதியாக 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அய்யய்யோ! இடைநிற்றல் அதிகரிக்கும்! பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் கல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வழக்கம் போல் கல்வியாளர்கள் எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு விமர்சித்து விட்டு நிகழ்ச்சிக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு போய்விடுவார்கள். தொலைக்காட்சிகளுக்கும் ஒருவாரத்திற்கான ஸ்லாட் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

புற்றீசல்கள் போல் தினம் ஒரு ஆசிரியர் இயக்கம் தோன்றுகிறது. பயன் என்ன? யார் பயன் அடையப்போகிறார்கள்? மிகப்பெரிய ஆசிரிய பேரியக்கங்கள் எல்லாம் பங்காளி சண்டை போட்டுக் கொண்டு ஆசிரியர்களை பாகுபடுத்தி வைத்துள்ளன. ஒரு சிலர் சங்கம் அழியும் வரை அதன் தலைவர்களாக இருந்து கொண்டு ஆசிரியர்களை தவறாக வழிநடத்திக் கொண்டுள்ளனர்.நாமெல்லாம் போதிப்பவர்கள். நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பவர்களை வழிநடத்தியவர்கள். வழிகாட்டிகள். ஆனால் நமக்கு வழிகாட்டத் தான் சரியான ஆட்கள் இல்லை. எதிர்கால இந்தியாவை உருவாக்குகிறோம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் பின்பக்கத்தில் நமக்குள்ளேயே போர் தட்டிக் கொண்டிருக்கிறோம். 

ஆந்திரா முன்னுதாரணம் காண்பித்து விட்டது. நம்முடைய இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களைப் பற்றியோ கல்வி உயர் அலுவலர்களைப் பற்றியோ இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றியோ யாரும் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆந்திராவில் இருந்து ஏபிஎல்லை(ABL) பிடித்துக் கொண்டு வந்தவர்களுக்கு இதனையும் கொண்டு வர வெகு நேரம் ஆகாது.பதவி வெறி பணத்தாசை சுயநலம் சாதி பாகுபாடு அரசியல் இயக்க சார்ப போன்றவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஆசிரியர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு அனைத்து முன்னணி தலைவர்களும் முழு மூச்சாய் செயலில் இறங்கினால் மட்டுமே நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். 

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை எல்லாம் காத்திருக்காமல் செயலில் இறங்கிட வேண்டும். யாரையும் நம்பாமல் நமக்காக யார் உண்மையாய் உழைத்திட தயாராய் உள்ளாரோ அவர் பின்னால் அணி திரண்டு போராடிட முன்வந்தால் மட்டுமே இன்னும் சிறிது நாட்களுக்கு தொடக்கக் கல்வித் துறை மிஞ்சியிருக்கம். தயாராகுங்கள் எச்சரிக்கை! அபாய மணி அடித்துவிட்டது! 

No comments:

Post a Comment