திருக்குறள்

05/06/2013

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் குறைந்தது


தமிழகத்தில் அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) 32 உட்பட 500க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இரண்டாண்டு கால தொடக்கல்வி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் சுமார் 16 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த படிப்பை முடித்தவர்கள் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் மருத்துவம், பொறியியலில் சேருவதுபோல், தொடக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்பில் மாணவர்கள் ஆர்வமாக சேர்ந்தனர். 5 லட்சம் பேர் படிப்பை முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த படிப்பை முடித்தால் 15 ஆண்டுகளுக்கு பிறகுதான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் ஆர்வம் தற்போது குறைந்துவிட்டது. இதன்படி, 2011,12ம் ஆண்டில் 8,000 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு 4,097 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு 3,864 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் 3,843 மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள மொத்த இடத்தில் நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையில் கூட மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மொத்தம் 2,107 பேர் சேர்க்கை ஆணை பெற்றனர். விண்ணப்பித்தவர்களில் 1,736 பேர் கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறவில்லை. குறிப்பாக, டயட்டில் மட்டுமே மாணவர்கள் அதிகம் சேர்ந்தனர். இந்நிலையில் 2013,14ம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வரும் 12ம் தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100க்கும் குறைவானவர்களே இதுவரை விண்ணப்பம் வாங்கியுள்ளனர். மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளதால், முதல் முறையாக நடப்பாண்டில் அந்தந்த மாவட்டத்தில் ஆன்லைன் முறையில் ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment