திருக்குறள்

03/07/2013

மவுசு குறைந்து வரும் ஆசிரியர் பயிற்சி படிப்பு: காலியிடம்-17,000; விண்ணப்பித்தவர்-4,430 பேர்


ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டில் 17 ஆயிரத்து 45 சீட்டுக்கள் உள்ளன. இந்த படிப்புக்கான மவுசு குறைந்து வருவதால், இந்த ஆண்டு 4 ஆயிரத்து 430 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

தமிழகத்தில் 539 அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அரசு பள்ளிகளில் எளிதாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிராமப்புற மாணவர்கள் இந்த படிப்பில் சேர ஆர்வம் காட்டி வந்தனர். இதனால், கடந்த சில வருடங்களாக இந்த படிப்புக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஆனால், தற்போது அரசு பள்ளிகளில் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதால், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தாலும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு ஆசிரியராக முடியும் என்பதால் இந்த படிப்பில் தற்போது யாரும் அக்கறை செலுத்தவில்லை.

இந்நிலையில் 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கவுன்சிலிங்

வரும் 8 ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நடத்தப்படும் இந்த கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு 17 ஆயிரத்து 45 சீட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆனால், 4 ஆயிரத்து 430 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில் 429 பேர் மாணவர்கள், 4001 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

No comments:

Post a Comment