திருக்குறள்

27/01/2014

சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக நாடு முழுவதும் 3000 ஏடிஎம் தொடங்குகிறது அஞ்சல் துறை

அஞ்சலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், தனது வருவாயை அதிகரிக்க அஞ்சல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால், வங்கி சேவையின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தனியார் துறையில் புதிய வங்கி உரிமம் வழங்க உள்ளதாக மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது. அப்போது, அஞ்சல் துறையும் வங்கி சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கிளை துவக்க முடிவு செய்தது. ஆனால், அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு மத்திய நிதி அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த 2012 - 13ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.6 லட்சம் கோடி டெபாசிட் உள்ளது. இது பொதுத்துறையை சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள டெபாசிட் டில் 50 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கியில் உள்ள டெபாசிட்டை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும், வங்கி சார்ந்த சேவைகளான தொலைபேசி, மின்சார கட்டணம் வசூலிப்பதிலும் அஞ்சல்துறை ஈடுபட்டுள்ளது. எனவே, வங்கி வர்த்தகத்தில் இந்திய அஞ்சல் துறை களம் இறங்குவதால், குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் வங்கி சேவை எளிதாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வர்த்தக ரீதியாக வங்கிகளை துவக்குவதற்கு அஞ்சல் துறை விண்ணப்பத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் வசதியை ஏற்படுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

வங்கி கிளைகள் இல்லாத கிராமங்களிலும் அஞ்சலக கிளைகள் உள்ளன. இதனால், வங்கி துறையில் ஈடுபடுவது அஞ்சல் துறை க்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பு வசதி வங்கி கிளைகளில், மின்னணு தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு வசதிகள் உள்ளது போன்று அஞ்சலகத்திலும் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் கூறியதாவது:அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் வசதிக்காக, நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2015ம் ஆண்டுக்குள் 3000 ஏடிஎம்கள் மற்றும் 1.35 லட்சம் மைக்ரோ ஏடிஎம்கள் நிறுவ அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டில் மட்டும் 1000 ஏடிஎம்கள் துவக்கப்படும். 

அடுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 3000 ஏடிஎம்களாக உயர்த்தப்படும். அஞ்சலகங்களில் 26 கோடி பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் இந்த ஏடிஎம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், ஏடிஎம் வசதி ஏற்படுத்திய பிறகு ஆறு மாதங்களில், இந்தியா முழுவதும் எந்த ஏடிஎம்மிலும் பயன்படுத்துவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி 5ம் தேதிக்குள் புதுடெல்லி, சென்னை மற்றும் பெங்களூரில் ஏடிஎம் நிறுவப்படும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த திட்டம் இன்று சோதனை அடிப்படையில் துவக்கப்படும் என்றும் மார்ச் இறுதியில் அதிகார பூர்வமாக துவக்கப் படும் எனவும் தெரிகிறது.

No comments:

Post a Comment