கேரளாவில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலி யல் தொல்லைகளை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க காவல் துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் சமீப காலமாக பள்ளிகளிலும், வேன் மற்றும் பஸ்களிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு பயந்து மாணவிகள் யாரிடமும் செல்வதில்லை. இதை பயன்படுத்தி மாணவிகளை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க டிஜிபி பாலசுப்பிரமணியத்திற்கு உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி அமைக்க டிஜிபி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும், ஆசிரியர்கள் அடித்தாலும், வேன்களில் டிரைவர்கள், கிளீனர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தாலும் உடனடியாக மாணவ, மாணவிகள் புகாராக எழுதி பெட்டியில் போடலாம். இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'மாணவிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் தொல்லையை தடுப்பதற்காகவே பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்க தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக இந்த புகார் பெட்டி திட்டம் மாணவிகளுக்கு மிகுந்த பாதுகாப்பாக அமையும். பெற்றோர், ஆசிரியர்களிடம் சொல்ல தயங்கும் விஷயங்களை மாணவிகள் புகார் பெட்டியில் தெரிவிக்கலாம்' என்றார்.
No comments:
Post a Comment